ஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்?


ஆசிரியர்கள் போராட்டம் சாமானிய மக்களின் ஆதரவைப் பெறாதது ஏன்?

# புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
#ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்திலுள்ள முரண்பாடுகளைக் களைய வேண்டும்.
# 7வது ஊதியக் குழு ஊதியத்தை அறிவித்த பிறகு தரப்படாமல் உள்ள 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
# மதிப்பூதியம், தொகுப்பூதியம், தினக்கூலி பெறக் கூடியவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
#3500 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்

#வேலைவாய்ப்பை பறிக்கக்கூடிய அரசாணை எண். 56, 100, 101 -ஐ ரத்து செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ (The joint Action council of Teachers Organisation-Government Employees Organisation-JACTO-GEO) அமைப்பைச் சேர்ந்த ஏறக்குறைய 2 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 22-ம் தேதியில் இருந்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

அவர்கள் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் அதிதமானது என்றோ, அதிகப்படியானது என்றோ சொல்லிவிட முடியாது. அரசு தங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகையைத்தான் அவர்கள் கேட்கின்றார்கள். இதற்கு நிதி நிலையைக் காரணம் காட்டி மறுப்பது என்பது அபத்தமானதாகும். அரசின் நிதி நிலை மோசமாக உள்ளது என்று சொல்லும் அமைச்சர்கள் எப்படி தங்களின் ஊதியத்தை மட்டும் பலமடங்கு உயர்த்திக் கொண்டார்கள் என்று தெரியவில்லை.  அமைச்சர்களுக்கே தங்கள் வாங்கும் சம்பளம் போதாது என்று தோன்றும்போது, இந்தச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் அரசு ஊழியர்கள் தங்களின் ஊதியத்தை மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாகக் கேட்பதில் என்ன தவறுள்ளது?

அரசிடம் கொடுக்க நிதி இல்லை என்று சொல்லும்,  இதே அரசுதான் 2011 இல் இருந்து ஆட்சியில் இருக்கின்றது. ஏறக்குறைய 8 ஆண்டுகள் தமிழகத்தை முழுமையாக ஆட்சி செய்திருக்கின்றார்கள். இந்த 8 ஆண்டுகளில் நிதிநிலையை மேம்படுத்த என்ன நடவடிக்கை எடுத்தார்கள்? 
அரசால் ஏன் இந்த தேதிக்குள் நிலுவைத் தொகையை கொடுத்து விடுகின்றோம் என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஏன்  அடக்குமுறையை அரசு கையாள்கின்றது? தற்போது ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டிருக்கின்றார்கள். பெரும் அச்சுறுத்தல்கள் மூலம் இந்த அரசு, அரசு ஊழியர்களின் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கின்றது. தமிழகம் முழுக்க 2500 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை திரும்பப் பெறப்படுமா அல்லது அவர்களை சாவை நோக்கி இந்த அரசு தள்ளுமா எனத் தெரியவில்லை.

இது ஒரு புறம் இருக்க போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மக்களிடம் இருந்த ஆதரவைப் பற்றி இந்தத் தருணத்தில் நாம் விமர்சனக் கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டி இருக்கின்றது.
சாமானிய மக்களின் கண்ணோட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் பெருமளவு அதிகம் என்ற எண்ணமே பெரும்பாலும் உள்ளது.
சமூகத்தில் பெரும்பான்மையான மக்கள் அரசு வேலை என்பதை தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள பயன்படும் ஒரு வழியாகவே பார்க்கின்றார்கள்.

இன்று சாமானிய மக்கள் மத்தியில் அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு எந்தவித ஆதரவும் இல்லாமல் வெறுப்பு மட்டுமே எஞ்சி நின்றதை நம்மால் பார்க்க முடிந்தது. இதற்கு முதன்மைக் காரணம் பெரும்பாலான சாமானிய மக்களுக்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது இருக்கும் மதிப்பீடுகளே. அரசுப் பள்ளிகள் என்றாலே தரமற்றவை, சொல்லிக் கொடுக்க மட்டார்கள், ஆசிரியர்கள் சரியாக வேலைக்கு வரமாட்டார்கள் என்ற எண்ணம் இன்று பெரும்பாலான மக்களுக்கு உள்ளது. இந்த எண்ணத்தை உண்டு பண்ணியது யார்? யாரெல்லாம் இதற்கு உடந்தையாக இருந்து அரசுப் பள்ளியின் பெயரைக் கெடுத்து குட்டிச் சுவராக்கினார்கள் என்று பார்த்தால் முதலில் அரசும், அதற்கு அடுத்து அந்த அரசிடம் பணியாற்றும் அரசு ஊழியர்களும் தான்.

உலகமயமாக்கலுக்குப் பின்னால் அரசானது திட்டமிட்டே அரசுப் பள்ளிகளை தரமற்று சீரழித்தது. அந்த இடத்தை கள்ளச் சாராய, ரியல் எஸ்டேட், அரசியல் மாஃபியாக்கள் பயன்படுத்திக் கொண்டு கல்வி வள்ளல்களாக, கல்வித் தந்தைகளாக அவதாரம் எடுத்தார்கள். இப்படி புற்றீசல் போலப் பெருகிய தனியார் பிராய்லர் பள்ளிகள் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்துவதற்காக கல்விதுறை அதிகாரிகளின் துணையோடு பெரும் மோசடிகளை அரங்கேற்றின. இதனால் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதோடு, மாநிலத்தில் முதல் மதிப்பெண் பெறும் பள்ளிகளின் பட்டியலிலும் தனியார் பள்ளிகள் தொடர்ந்து இடம் பிடித்தன. இவை அனைத்துமே தனியார் பள்ளிகளின் கட்டமைப்பு, திறமையான ஆசிரியர்கள், அடிப்படை வசதிகள் போன்றவற்றால் ஏற்பட்ட விளைவு என்ற மாயை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. இந்த பொய் பரப்புரைக்கு சாமானிய நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்களும் இரையானார்கள். தனியார் பள்ளியில் படித்தால்தான் தங்கள் வீட்டுக் குழந்தைகள் அதிகப்படியான மதிபெண்களைப் பெற முடியும் என்று திட்டவட்டமாக அவர்கள் நம்ப வைக்கப்பட்டார்கள். தனியார் பள்ளிகள் உருவாக்கி வைத்திருக்கும் இந்த மாயையை உடைக்க களத்தில் இறங்கிப் போராடி இருக்க வேண்டிய அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்ன செய்தார்கள்?

ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தங்களுடைய ஊதிய உயர்வுக்காகப் போராடுவது எந்த வகையிலும் தவறானது கிடையாது. இன்று இவர்களை ஒடுக்கும் அரசு நாளை மற்ற அரசு ஊழியர்களையும் அதே பாணியில்தான் ஒடுக்கும் என்பது வெளிப்படையான உண்மை. அதே சமயம் மக்களுக்காக சேவையாற்றும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தாங்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவைப் பெறும் வகையில் அவர்கள் தங்களின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும். மக்கள் ஆதரவு கிடைக்கும் போது மட்டுமே அவர்களால் தங்களுடைய கோரிக்கைகளை எளிதாக வென்றெடுக்க முடியும்.

ஒரு பெரும் அறிவுஜீவி வர்க்கமான ஆசிரியர்கள் சாமானிய மக்களை வென்றெடுக்கத் தவறி இருக்கின்றார்கள்.  இந்தப் போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்ததால்தான்  அரசு இந்த அளவிற்கு துணிந்து போராட்டத்தை ஒடுக்கி இருக்கின்றது. தமிழகம் முழுக்க 1300 ஆசிரியர்கள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். ‘அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப காலியாகும்’ என்பதற்கு ஏற்ப தற்காலிக ஆசிரியர் பணிக்கு மாநிலம் முழுவதும் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருக்கின்றார்கள்.

சில பேர் மக்களின் ஆதரவு தேவையில்லை, அவர்கள் எந்தப் போராட்டத்திற்குத்தான் ஆதரவு கொடுத்தார்கள் என்ற தொனியில் பேசுகின்றார்கள். தற்போது இந்தப் போராட்டத்திற்கு ஏற்பட்டிருக்கும் பின்னடைவே அவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் என்று நம்புகின்றோம். அரசு ஊழியர்களுக்குப் படியளப்பது அரசு அல்ல, மக்கள்தான் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மக்களை வென்றெடுக்காமல், அவர்களுக்குப் போராட்டத்தின் நியாயத்தை உணர வைத்து களம் காண வைக்காமல், எந்தப் போராட்டமும் வெற்றி பெற முடியாது. அது ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் நேர்மையான செயல்பாட்டில்தான் அடங்கி இருக்கின்றது. அரசு  அடக்கு முறைகளை   கடைபிடித்து போராட்டத்தை ஒடுக்கப் பார்க்கின்றது. ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தை மக்களிடம் எடுத்துச் சென்றால் மட்டுமே அரசுக்குப் பெரும் நெருக்கடியை உருவாக்க முடியும். அப்படி செய்யாதவரை அரசு இது போன்ற போராட்டங்களை ஒடுக்கவே செய்யும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

‘இந்திய விடுதலை வீரர்' மௌலானா ஹஸ்ரத் மஹானி

ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு