ஆசிரியர் ஆலோசகராகலாமா?

ஆசிரியர் ஆலோசகராகலாமா?
உங்களுடைய பள்ளி அல்லது கல்லூரி நாள்களை நினைவுக்குக் கொண்டுவாருங்கள், உங்களுக்குப் பிடித்த ஆசிரியர் யார் என்று சிந்தியுங்கள். அவர் ஏன் விசேஷம்? அவரை உங்களுக்கு ஏன் அந்த அளவு பிடித்தது? சிலர் பிரமாதமாகப் பாடம் நடத்தி நம் மனத்தில் இடம்பிடித்திருப்பார்கள், ஆனால் இன்னும் சிலர் தங்களுடைய ஆதரவான நடவடிக்கைகளாலேயே நம் நினைவில் நின்றிருப்பார்கள். மாணவர்களின் பிரச்னைகளை அனுதாபத்துடன் காதுகொடுத்துக்கேட்டிருப்பார்கள், ஆகவே, நாம் அவர்களை இன்னும் நினைவில்வைத்திருப்போம். பொதுவாக, மிகச்சிறந்த ஆசிரியர்களிடம் இந்த இரு குணங்களுமே இருக்கும்.
மாணவர்கள் தங்களுடைய வளரும்பருவத்தில் பாதியைப் பள்ளியில், கல்லூரியில்தான் செலவிடுகிறார்கள். ஆகவே, மாணவர்களுடைய ஆளுமையை உருவாக்குவதில் ஆசிரியர்கள் ஒரு முக்கியப் பங்காற்றுகிறார்கள். சில பள்ளிகளில், பயிற்சிபெற்ற ஆலோசகர்கள் என்று தனியே சிலர் இருப்பார்கள். பெற்றோருடன் உறவு முறிவுகள், உறவு பாதிப்புகள், சுயமதிப்புப் பிரச்னைகள், உடல்-தோற்றப் பிரச்னைகள், தீய பழக்கங்கள், தற்கொலைச் சிந்தனை, எந்தத் துறையில் கவனம் செலுத்துவது என்கிற குழப்பம் போன்ற பிரச்னைகளால் திணறும் மாணவர்களுக்கு உதவிசெய்வார்கள். அதேசமயம், அவர்களுடன் ஒப்பிடும்போது, ஓர் ஆசிரியர் மாணவர்களுடன் அதிகநேரம் இருக்கிறார், எப்போதும் தொடர்பில் உள்ளார், ஆகவே, அவரும் மாணவர்களிடம் இதுபற்றிய பேச்சுகளைத் தொடங்கலாம், அவர்களைப் பேசுமாறு ஊக்குவிக்கலாம். இதனால், பள்ளி, கல்லூரியில் உள்ள மாணவர்களுக்கு ஆசிரியர்களே வேண்டிய ஆலோசனைகளை வழங்கலாம்.
யாரால் இயலும்?
மாணவர்கள் அத்தனை சுலபத்தில் தங்கள் பிரச்னையை ஓர் ஆசிரியரிடம் பகிர்ந்துகொண்டுவிடமாட்டார்கள். ஆகவே, ஆசிரியர்கள் திறந்த மனத்துடன் இருக்கவேண்டும், உதவிசெய்யத் தயாராக இருக்கவேண்டும். ஓர் ஆசிரியரிடம் மாணவர்கள் மனத்தைத் திறந்து பேசவேண்டுமென்றால், அவர்கள் மனத்தில் அவரைப்பற்றி நம்பிக்கை வரவேண்டும். இது மிகவும் அவசியம்.
மாணவர்கள் ஓர் ஆசிரியருடன் பேசவேண்டுமென்றால், அவர்களுக்குச் சில குறிப்பிட்ட குணங்கள் இருக்கவேண்டும். உதாரணமாக:
புறநிலை அணுகுமுறை:
ஆசிரியர் ஒரு மாணவனைப் புறநிலை முறையில் காணவேண்டும், அவர்களுடைய கல்வித்திறமை அல்லது ஆளுமை அடிப்படையில் அவர்கள்மீது எந்தத் தனிப்பட்ட பாரபட்சமும் காட்டக்கூடாது.
அனுபவம்:
ஒரு கல்விநிறுவனத்துடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றும் ஒரு முக்கியமான ஆசிரியர், அந்த இடத்தையும் மாணவர்களையும் நன்றாகப் புரிந்துவைத்திருப்பார், அவரால் ஒரு நல்ல ஆலோசகராகப் பணியாற்ற இயலும். 'இவரை எளிதில் அணுகலாம்' என்று மாணவர்கள் எண்ணுகிற ஓர் ஆசிரியரையும் அடையாளம் கண்டு, ஆலோசனை வழங்குவதற்கு அவருக்குப் பயிற்சி தரலாம்.
நன்கு கவனிக்கும் திறன்கள்:
மாணவர் தன்னிடம் சொல்வதில் ஆசிரியர் உண்மையான ஆர்வம் காட்டவேண்டும். அவர்கள் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பயிற்சியெடுக்கவேண்டும், பொறுமையாக இருக்கவேண்டும், மாணவர் பேசும்போது தலையை அசைப்பது போன்ற சரியான உடல்மொழியைப் பயன்படுத்தவேண்டும்.
மிகுந்த நேர்மை:
மாணவர்கள் தங்களை மிகவும் தொந்தரவுசெய்யும் பிரச்னைகளைப் பகிர்ந்துகொள்கிறார்கள் என்றால், அந்த ஆசிரியர் அவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது, அவர்களுடைய நம்பிக்கையைக் காப்பாற்றவேண்டும், அதைப்பற்றிக் கிசுகிசு பேசக்கூடாது. உதாரணமாக, ஒரு மாணவருக்குக் குடும்பப் பிரச்னைகள் உள்ளன என்றால், தனக்கு மிகவும் நம்பிக்கையுள்ளவர்களிடம்மட்டும்தான் அவர் அதை வெளிப்படுத்துவார்.
அனுதாபம், தேடல்குணம்:
ஆசிரியருக்கு அனுதாபவுணர்வு இருக்கவேண்டும், அப்போதுதான் மாணவரின் கோணத்திலிருந்து பிரச்னையைப் புரிந்துகொள்ள இயலும். அதேசமயம், அவர் பேச்சைத் தொடர்ந்து நிகழ்த்தவேண்டும், மாணவரின் பிரச்னையை அவர் மேலும் விளக்கமாகப் பகிர்ந்துகொள்ளும்படி செய்யவேண்டும், அதற்கான திறன்களும் அவருக்கு இருக்கவேண்டும், அப்போதுதான் அவரால் பிரச்னைக்கு ஒரு தீர்வு காண இயலும்.
ஒரு மாணவர் ஏதோ பிரச்னையோடு ஓர் ஆசிரியரை அணுகினால், அவர் என்ன செய்யவேண்டும்?
சகஜமாகப் பழகவேண்டும்: 
ஆசிரிய-ஆலோசகர் செய்யவேண்டிய முதல் வேலை இதுதான். ஆசிரியருடன் பேசும்போது, மாணவர் சகஜமாக உணரவேண்டும், அப்போதுதான் அவர்கள் தங்களுடைய பிரச்னைகளைப்பற்றிப் பேசத் தொடங்குவார்கள். ஞாபகமிருக்கட்டும், இந்தக்கட்டத்தில், ஆசிரியரை நம்பலாமா என்று மாணவர் யோசித்துக்கொண்டிருப்பார், எடைபோட்டுக்கொண்டிருப்பார். ஆகவே, இந்தக்கட்டத்தில் சொற்களால் மற்றும் சொற்கள் அல்லாத வழிகளிலும் தகவல்தொடர்பை நிகழ்த்துவது முக்கியம்.
மாணவர்கள் தங்களை வெளிப்படுத்த அனுமதிக்கவேண்டும்: 
மாணவர் தான் சந்திக்கும் சவால்களைப்பற்றிப் பேசத் தொடங்கும்போது, அவர்களைத் தொடர்ந்து பேச அனுமதிக்கவேண்டும். அவர்கள் சொல்கிற எல்லாவற்றையும் கேட்கவேண்டும், இடையில் குறுக்கிடக்கூடாது, அதனால் அவர்களுடைய எண்ணவோட்டம் தடைபடும். அத்துடன், ஆசிரியர் என்றமுறையில் அவர் மாணவருடைய எண்ணங்களைத் திரும்பவும் ஒருமுறை சொல்லலாம், அதன்மூலம் தான் பிரச்னையைச் சரியாகப் புரிந்துகொண்டிருப்பதை உறுதிசெய்யலாம். இதனால், அவர்களுடைய சிந்தனையும் தெளிவாகும். "இப்படிதான் நான் உன்னுடைய பிரச்னையைப் புரிந்துகொண்டிருக்கிறேன். இதை நீ இந்த முறையில் அணுகலாம் என்று நான் நினைக்கிறேன். நீ என்ன நினைக்கிறாய்?" இதுபோன்ற வழிகளில் அவர் பேச்சைத் தொடங்கலாம். ஏற்கெனவே தயார்செய்த தீர்வுகளை மாணவருக்கு வழங்கவேண்டாம், அதற்குப்பதிலாக, பிரச்னையை எப்படிச் சந்திப்பது, எப்படிச் சமாளிப்பது என்று அவரையே சிந்திக்கச்செய்யும் வழிகளைச் சொல்லித்தரலாம்.
தீர்ப்புச் சொல்லவேண்டாம்:
 ஆசிரியர் மாணவரிடம் அனுதாபம் காட்டவேண்டும், கருணையோடு பேசவேண்டும்.  உதாரணமாக, ஒரு மாணவர் தினமும் 60 சிகரெட் பிடிப்பதாகச் சொல்கிறார், ஆசிரியர் உடனே 'ஓ, அது ரொம்பத் தப்பு' என்று சொல்லக்கூடாது. அவர் தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளப் பழகவேண்டும்.
உணர்வுகளை ஒரேமாதிரியாக வெளிப்படுத்தவேண்டும்: 
ஆசிரியர் என்றமுறையில், அவர் தனது எண்ணங்கள் மற்றும் உணர்வுகளில் ஒரேமாதிரியாக இருக்கவேண்டும். தன்னுடைய மனப்போக்குகள் மற்றும் உணர்வுகளைத் தன்னிடம் உதவி கேட்டு வரும் மாணவரிடம் காண்பித்துவிடக்கூடாது, அவரைக் காயப்படுத்திவிடக்கூடாது. எல்லாச் சூழல்களிலும் அவர்கள் அமைதியுடன் நடந்துகொள்ளவேண்டும்.
முழுமையாக ரகசியம் காக்கவேண்டும்:
 அவர் சொல்லும் விவரங்கள் ரகசியமாக இருக்கும், யாரிடமும் சொல்லப்படாது என்று மாணவருக்குப் புரியவையுங்கள். (மாணவர் பகிர்ந்துகொள்ளும் பிரச்னைகள் அவருக்கோ பிறருக்கோ ஆபத்தானவை என்றால், அதனைப் பெற்றோர், தலைமை ஆசிரியரிடம் கூறி தக்க நடவடிக்கைகள் எடுக்கலாம்)
பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகம் தலைமை ஆலோசகர் ஆலோசனைகளுடன் இந்த உள்ளடக்கம் உருவாக்கப்பட்டது.

                                         இரா பச்சியப்பன்.,
                                  ஆசிரியர் பயிற்றுநர்

Comments

Popular posts from this blog

‘இந்திய விடுதலை வீரர்' மௌலானா ஹஸ்ரத் மஹானி

ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு