இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒருநாள் இடைவெளிக்காக ஊதியத்தில் ரூ.15,500 குறைப்பது மிகப்பெரிய அநீதி: அன்புமணி கண்டனம்

உண்ணாநிலை போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "ஊதிய முரண்பாட்டைக் களைய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் நடத்தி வரும் இடைநிலை ஆசிரியர்களில் முப்பதுக்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அரசு அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பாகுபாடின்றி கல்வி வழங்கும் நிலையில், அவர்களுக்கான ஊதியமும் பாகுபாடின்றி வழங்கப்பட வேண்டும். இது தான் இயற்கை நீதியாகும். ஆனால், இந்த விஷயத்தில் தமிழக அரசு ஒரு தரப்பு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அநீதியை இழைத்து வருகிறது.

2009 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி வரை பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை ஊதியத்துடன் மற்ற படிகள் வழங்கப்படுகின்றன. ஆனால், அதன்பிறகு, அதாவது 2009 ஜூன் ஒன்றாம் தேதி முதல் பணியில் சேரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200 என்ற அளவில் மிகவும் குறைவாகவே ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதனால், 2009 மே மாதத்தில் பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அனைத்து படிகளுடன் சேர்த்து ரூ.42,000 வரை ஊதியம் வழங்கப்படும் நிலையில், அதன்பின்னர் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.26,500 வரை மட்டுமே ஊதியம் வழங்கப்படுகிறது. ஒரு நாள் இடைவெளிக்காக மாத ஊதியத்தில் ரூ.15,500 குறைத்து வழங்குவதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவே முடியாது. இந்த அநீதிக்கு எதிராக 2009 ஆம் மே மாதத்திற்கு பிறகு பணியில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் 9 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் போதிலும், அதனால் எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இந்த விஷயத்தில் அரசின் பாராமுகத்தைக் கண்டித்து இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 24 ஆம் தேதி முதல் தொடர் உண்ணாநிலை மேற்கொள்ளப்போவதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் அறிவித்திருந்த நிலையில், அதேநாளில் அவர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் உயரதிகாரிகள் அழைத்துப் பேச்சு நடத்தினார்கள்.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதை அரசுத் தரப்பு ஏற்றுக்கொண்ட போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்று ஊதிய உயர்வு வழங்க மறுத்துவிட்டது. இதைக் கண்டித்து 24 ஆம் தேதி மாலை முதல் பள்ளிக்கல்வி இயக்குநர் வளாகத்தில் ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டனர்.

தங்களின் கோரிக்கைகள் பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தங்களை அழைத்துப் பேச வேண்டும் என்று வலியுறுத்தினர். மக்கள் நலனில் அக்கறை உள்ள முதல்வராக இருந்தால், உடனடியாக அவர்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசோ அவர்களை கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் திடலில் அடைத்தது. அங்கும் அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு அவர்களை அங்கிருந்து காவல்துறை மூலம் விரட்டியடித்தது. அதைத்தொடர்ந்து நேற்றிரவு முதல் ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

உண்ணாநிலை மேற்கொண்டிருந்த ஆசிரியர்களில் 30-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை அரசு மனம் இரங்கவில்லை. இதே கோரிக்கையை வலியுறுத்தி கடந்த காலங்களில் ஏராளமான போராட்டங்களை இடைநிலை ஆசிரியர்கள் நடத்தியுள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தினர். அப்போதும் ஏராளமானோர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்களின் கோரிக்கைகளை மட்டும் அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால் அவர்களின் ஊதிய விகிதத்தை திருத்தி அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பள்ளிக் கல்வித்துறை பரிந்துரைத்தது. ஆனால், அதையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும், மே மாதத்திற்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இடையே குறைந்தபட்சம் ரூ.15,500 ஊதிய முரண்பாடு நிலவுகிறது. ஒரே மாதிரியான பணியைச் செய்யும் ஆசிரியர்களிடையே இவ்வளவு ஊதிய ஏற்றத்தாழ்வு இருப்பது மிகப்பெரிய அநீதி. இதை களைய வேண்டியது அரசின் கடமை. எனவே, போராட்டம் நடத்தும் ஆசிரியர்களை முதல்வர் அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்" என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

Comments

Popular posts from this blog

‘இந்திய விடுதலை வீரர்' மௌலானா ஹஸ்ரத் மஹானி

ஆசிரியர்கள் அவசியம் அறியவேண்டிய உணர் திறனறிவு